வேலை உறுதி திட்டம்: 2 முறை கருவிழி போட்டோ எடுக்க உத்தரவு
வேலை உறுதி திட்டம்: 2 முறை கருவிழி போட்டோ எடுக்க உத்தரவு
ADDED : ஜன 01, 2024 11:44 PM
கம்பம் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகளை களைய, தினமும் இரு முறை வேலை செய்வோரின் கருவிழிகளை போட்டோ எடுத்து ஒப்பிட்டு பார்த்து சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பு இல்லாத ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சிலர் வேலைக்கு செல்லாமலே சம்பளம் வாங்குவது, போலி பயனாளிகள் பெயரில் சம்பளம் முறைகேடுகள் நடைப்பதாக புகார்கள் எழுந்தன.
இத்திட்டத்தில் முறைகேடு நடக்க கூடாது என்பதற்காக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்று முதல் வேலை நடக்கும் இடங்களில் வேலைக்கு வருபவர்களின் கருவிழிகளை சம்பந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர் போட்டோ எடுக்க வேண்டும்.
காலை, மதியம் என இருமுறை கருவிழிகளை போட்டோ எடுக்க வேண்டும். அதனை தங்களின் ஆன்டிராய்டு அலைபேசி செயலியில் ஆதார் எண் மூலம் கருவிழிகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இரண்டும் ஒத்து இருந்தால் மட்டுமே சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் நடக்காது என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

