பணியிட மாறுதல் கலந்தாய்வு: மகப்பேறு மருத்துவர்கள் கோரிக்கை
பணியிட மாறுதல் கலந்தாய்வு: மகப்பேறு மருத்துவர்கள் கோரிக்கை
ADDED : பிப் 11, 2026 06:30 AM
சென்னை: தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, சிறப்பு டாக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் சீனியர் டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மகப்பேறு டாக்டர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மகப்பேறு டாக்டர்கள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், 57 மகப்பேறு டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கூடுதல் பணி சுமையால் அவதிப்பட்டு வருகிறோம். ஆனாலும், மகப்பேறு கால இறப்புகளை குறைத்துள்ளோம்.
பணிச்சுமை அதிகம் இருந்தாலும், சிறப்பாக சேவையாற்றி வரும் எங்களுக்கு, குறைந்தபட்சமாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்தோம்.
ஆனால், மருத்துவ கல்வி இயக்குநர், எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிடுவோம் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.

