ADDED : ஆக 26, 2025 06:13 AM

சென்னை : சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், 7.75 கோடி ரூபாய் மதிப்பில், கோட்டூர்புரத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் எதிரில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதழியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதுடன், இளம் தலைமுறையினருக்கு, குறைந்தபட்சமாக, 10,000 ரூபாய் கட்டணத்தில், ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்புடன், டிஜிட்டல் மீடியா பயிற்சி வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
இங்கு, இளங்கலை பட்டப்படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மாணவர்கள் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரியும் வகையில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் கல்வி நிர்வாகம் குறித்த விபரங்களை, https://cij.tn.gov.in// என்ற இணையதளத்தில் அறியலாம்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுடன்
முதல்வர் கலந்துரையாடல்
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், முதல் 'பேட்ஜ்' மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர் ஒருவர் பேசுகையில், ''தென் மாநிலங்களில், முதல் முறையாக ஒரு அரசு நிறுவனம், பத்திரிகை துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு என, ஒரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி. ''நான், தி.மு.க.,வின் இளம் பேச்சாளர் என்பதால், பத்திரிகை துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். கொளத்துாரில் நான் முதல் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், 'கட்சி பணி மற்றும் மக்கள் சேவையில் ஆர்வம் வேண்டும்' என, முதல்வர் அறிவுறுத்தினார். அதுதான், நான் இங்கு பயிற்சி பெற காரணம்,'' என்றார். தென்காசியை சேர்ந்த மாணவி சுபத்ரா பேசுகையில், ''கிராமப்புற மாணவர்களால், இதழியல் போன்ற படிப்பை பெற முடிவதில்லை. காரணம் ஆறு மாதங்களுக்கு 50,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ''ஆனால், தமிழக அரசு தற்போது 10,000 ரூபாயில், விடுதியுடன் கூடிய ஓராண்டு முதுகலை இதழியல் பட்டயப் படிப்பை வழங்கியிருப்பது பயனுள்ளதாக உள்ளது,'' என்றார்.