செம்மரம் கடத்தும்போது களங்கம் ஏற்படவில்லையா 'மிளகாய் பொடி' விவகாரத்தில் நீதிபதி கேள்வி
செம்மரம் கடத்தும்போது களங்கம் ஏற்படவில்லையா 'மிளகாய் பொடி' விவகாரத்தில் நீதிபதி கேள்வி
ADDED : செப் 03, 2025 02:46 AM
சென்னை:'செம்மரம் கடத்தியபோது, நற்பெயருக்கு களங்கம் ஏற்படவில்லையா,' என, மிளகாய் பொடி அடைமொழியை நீக்க கோரி வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சென்னை பாடியநல்லுாரை சேர்ந்தவர், மிளகாய்பொடி வெங்கடேஷ் என்ற வெங்கடேஷ். இவர் மீது தமிழகம் மற்றும் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக, ஆயுதங்கள் வைத்திருந்ததாக, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெங்டேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் தாய், 15 ஆண்டுகள் மிளகாய்பொடி வியாபாரம் செய்து வந்தார். இதனால், சிறையில் என்னை, 'மிளகாய் பொடி' என்ற அடைமொழியுடன், சிறை அதிகாரிகள் அழைப்பதால், மன ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளேன். மிளகாய் பொடியை துாவி கொலை செய்வீர்களா என கேட்கின்றனர். இதனால், சமூகத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, ஆவணங்களில் மிளகாய் பொடி என்ற அடைமொழியை நீக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''செம்மரம் கடத்தியபோது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா,'' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'குற்றவாளியாக இருந்தாலும், அவரது கண்ணியம் காக்கப்பட வேண்டும்' என்றார்.
இதையடுத்து மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை செப்., 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.