ADDED : நவ 07, 2026 07:51 PM

கூடலுார்:
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியில், நெலக்கோட்டை வனச்சரக ஊழியர்கள்; கூடலுார் சரக வன ஊழியர்கள் இணைந்து இன்று (நவ.,7) அதிகாலை கூட்டாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, தேவர்சோலை பகுதியில் துப்பாக்கி சப்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், கடமானின் இறைச்சியை கடத்தி வருவது தெரிய வந்தது. காருடன் அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் தேவர்சோலை பகுதியைச் ஹரிதாஸ், 35, சஜின்தேவ்,34, என்பது தெரியவந்தது. மேலும், ‘அதே பகுதியை சேர்ந்த விவேக், நவ்சாத் ஆகியோர் துப்பாக்கியால் கடமானை சுட்டு வேட்டையாடியதும், அவர்கள் அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்று, கடமான் இறைச்சியை காரில் எடுத்து வந்தனர்’ என, தெரிய வந்தது.
இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், அருகே உள்ள, காபி தோட்டத்தில் வன ஊழியர்கள்ஆய்வு செய்து, கடமானின் தலை உள்ளிட்ட பிற உடல் பாகங்களை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், ‘கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்தது சென்றது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளோம். அதில், தொடர்புடைய இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும், வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியும் தேடும் பணி நடந்து வருகிறது’ என்றனர்.
