கல்பாக்கம் அணுமின் நிலையம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தம்
கல்பாக்கம் அணுமின் நிலையம் பராமரிப்புக்காக உற்பத்தி நிறுத்தம்
ADDED : செப் 02, 2025 05:08 AM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில், 60 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கல்பாக்கத்தில் மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்தின், சென்னை அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 220 மெகா வாட் திறன் உடைய இரு அணு உலைகள் உள்ளன. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 330 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் முதல் அணு உலையில் பழுது காரணமாக, 2018 ஜன., 30ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நடந்த நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு 150 மெகா வாட் வரை வழங்கப்பட்டது.
இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக, அந்த அணு உலையில், நேற்று அதிகாலை முதல் இரு மாதங்கள், வரும் அக்., 31ம் தேதி வரை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.