ADDED : மார் 13, 2024 01:52 AM

கோவை;உடல்நலக்குறைவு காரணமாக, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் நேற்று முக்தி அடைந்தார்.
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில், 1969ம் ஆண்டு கந்தசாமி தேவர், குணவதி தம்பதிக்கு, ஐந்தாவது மகனாக சிவலிங்கேஸ்வரர் பிறந்தார்.
பள்ளிப்படிப்பு பயிலும் போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டது.
காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றங்கரையில், அங்காள பரமேஸ்வரி சிலையை கண்டெடுத்து, அப்பகுதியில் கோவில் ஏற்படுத்தினார்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் காமாட்சிபுரி ஆதீனத்தை ஏற்படுத்தினார். அனைவருக்கும் ஆன்மிகத்தையும், சக்தி வழிபாட்டையும் பரப்பினார்.
சமீபத்தில் டில்லியில் புதிதாக கட்டப்பட்ட, பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர்களில், இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நுரையீரலில் தொற்று
அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரலில் நோய் தொற்று இருந்தது; அதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, பல்லடம் சித்தம்பலம் கோட்டை கோவிலில் தங்கியிருந்த போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முக்தி அடைந்தார். அவருக்கு வயது, 56. அவரது இறுதி சடங்குகள் நேற்று மாலை நடந்தன. தொடர்ந்து, சிரவை ஆதீனம் முன்னிலையில், காமாட்சிபுரி சக்தி பீடத்தில், உடல் அடக்கம் செய்யப்பட்டது.
காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

