மொழிப்போர் நடக்கும் நேரம் இது பட விழாவில் கமல் பேச்சு
மொழிப்போர் நடக்கும் நேரம் இது பட விழாவில் கமல் பேச்சு
ADDED : ஏப் 18, 2025 11:42 PM

சென்னை'நாயகன் படத்திற்கு பின், 37 ஆண்டுகள் கழித்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்துள்ள, தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் பேசியதாவது:
இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச போகிறேன். இது அரசியல் அல்ல. இது, தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை, 2,000 ஆண்டுகளாக செய்கிறோம்.
மணிரத்னத்துடன் இணைந்து, இப்படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். அவருக்கும், எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை.
இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். காரணம், நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள்; அதனால் தான் இவ்வளவு நம்பிக்கை.
எனக்கு ஏதாவது பிரச்னை என்றால், டி.ராஜேந்தர் என் நெஞ்சில் சாய்ந்து அழுது, சட்டையை நனைத்து விடுவார்.
பாசத்தில் அப்பா எட்டு அடி என்றால், மகன் சிம்பு, 16 அடி. பொறாமையும், போட்டியும் நிறைந்த திரைத்துறையில், இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம்.
மொழிப்போர் நடக்கும் நேரம் இது. எதுக்கு வம்பு என, இசையமைப்பாளர் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை வைத்து, 'ஜிங்குச்சா' என்ற வார்த்தையை, இந்த படத்தின் பாடல் ஒன்றில் பயன்படுத்தினோம்.
இது, சீனா, ஜப்பான் மொழியாக கூட இருக்கலாம். நாங்கள் இன்னொரு மொழிக்கு போய் விட்டோம். இது, எங்களோட மும்மொழி திட்டம்.
இவ்வாறு கமல் பேசினார்.

