கோவிலில் கரகம் ஆடலாம்; நடனம் ஆடலாமா பக்தியுள்ளோரை நிர்வாகியாக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
கோவிலில் கரகம் ஆடலாம்; நடனம் ஆடலாமா பக்தியுள்ளோரை நிர்வாகியாக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
ADDED : அக் 30, 2024 03:09 AM
சென்னை:திருவேற்காடு கோவிலில், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த பெண் அறங்காவலர் மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், கோவில் ஊழியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், தெற்கு பால்பண்ணை சேரியை சேர்ந்த கே.ஜெயபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை திருவேற்காட்டில் பழமையான தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் உள்ளே, கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று நடந்த சங்கடமான நிகழ்வு பற்றிய காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவின.
அந்த காட்சியில், கோவிலின் அறங்காவலர் வளர்மதியுடன், 12 பெண்கள் இணைந்து, கோவில் கருவறையின் முன் நடனமாடி உள்ளார். அதை,'ரீல்ஸ்' வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
கோவில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை புறம்தள்ளிய அறங்காவலர், கோவில் பணியாளர்கள் உடன் இணைந்து, 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தது, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு ஒரே மாதிரியான உடை அணிந்து வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரி, இரண்டு முறை புகார் அளித்தேன். இருப்பினும், புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கோவிலின் புனிதம், மதிப்பை குலைக்கும் வகையில் நடந்த அறங்காவலர் உள்ளிட்டோர் மீது, ஹிந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அறங்காவலர், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ஹிந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''அறங்காவலர் வளர்மதியின் பதவி காலம் முடிந்து விட்டது. அவரிடம் விளக்கம் கேட்டபோது, இதுபோல எதிர்காலத்தில் செயல்பட மாட்டேன் என்று உறுதி தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
''மன்னிப்பு கோரி, நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளார். கோவில் மேம்பாட்டுக்கு என, பல நல்ல காரியங்களை செய்துள்ளார். வீடியோ எடுத்த விவகாரத்தில், மற்ற ஊழியர்களுக்கு, 'மெமோ' அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, 'கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம்; நடனம் ஆடலாமா' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 'கடவுள் மீது பக்தி உள்ளவர்களை, கோவில்களில் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்' என, அரசுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், முன்னாள் அறங்காவலர் வளர்மதியின் மன்னிப்பை ஏற்று, வழக்கை முடித்து வைத்தும், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த ஊழியர்களுக்கு எதிராக, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலைய துறைக்கு நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவிட்டார்.