'ஒகேனக்கல் மின் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு'
'ஒகேனக்கல் மின் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு'
ADDED : பிப் 14, 2024 01:02 AM
சென்னை:''ஒகேனக்கல் நீர் மின் திட்டத்திற்கு, கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்காததால், திட்டம் நிலுவையில் உள்ளது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது, பா.ம.க., - ஜி.கே.மணி, ''பென்னாகரம் தொகுதி, ஒகேனக்கல்லில் புனல் மின் திட்டம் அமைக்கும் திட்டம் உள்ளதா; காவிரி ஆற்றின் குறுக்கே ஒகேனக்கல் பகுதியில், நீர் மின் நிலையம் அமைக்கும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தேசிய நீர் மின் கழகம் வாயிலாக, 120 மெகாவாட் திறனில் ஒகேனக்கல் நீர் மின் திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளது. கர்நாடகம் சம்மதிக்காததால், திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்படவில்லை.
இன்று உலகம் மரபுசாரா எரிசக்தியை நோக்கி பயணிக்க துவங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தினால், அபராதம் விதிக்கின்றனர்.
நாம் காற்றாலை மின்சாரத்திற்கும், சூரிய சக்தி மின்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
இந்திய அளவில், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில், தமிழகம் முன்னணியில் உள்ளது. நீர் மின் நிலையத்திற்கும், தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொது தனியார் கூட்டமைப்பு வழியே, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்காததால், திட்டம் நிலுவையில் உள்ளது.
கர்நாடக அரசு, அவர்களாக அந்த பகுதியில், நீர் மின் நிலையம் அமைப்பதாகக் கூறினர். அதற்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்லை. கர்நாடகம் சம்மதிக்காததால், காவிரி பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ளதால், நீர் மின் நிலையம் அமைக்க, தமிழக ஒப்புதல் அவசியம். இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்திசைவு வரும்போது, திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

