தமிழகத்திற்கு 85 டி.எம்.சி., திறப்பு மழையால் கர்நாடகா தாராளம்
தமிழகத்திற்கு 85 டி.எம்.சி., திறப்பு மழையால் கர்நாடகா தாராளம்
ADDED : ஜூலை 15, 2025 11:56 PM
சென்னை:கொட்டிய மழையால், தமிழகத்திற்கு, 43 நாட்களில், 85 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, ஜூன் மாதம், 42.2 டி.எம்.சி., நீர் தமிழக எல்லைக்குள் வந்துள்ளது.
இதேபோல, ஜூலை மாதம் 31.2 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், கடந்த 13ம் தேதி நிலவரப்படி, 42.8 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 43 நாட்களில், 85 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் நடப்பாண்டு முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
தாராளமாக உபரி நீர் திறக்கப்படுவதால், தமிழகத்திற்கு ஒதுக்கீட்டு அளவை காட்டிலும் கூடுதலாக காவிரி நீர் கிடைத்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், 100 டி.எம்.சி.,க்கு மேல் நீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.