6 மாதங்களில் 311 டி.எம்.சி., நீர் காவிரியில் திறந்துவிட்ட கர்நாடகா
6 மாதங்களில் 311 டி.எம்.சி., நீர் காவிரியில் திறந்துவிட்ட கர்நாடகா
ADDED : டிச 06, 2025 01:54 AM
சென்னை: தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது .
அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 42.2 டி.எம்.சி., நீர் கிடைத்தது.
ஜூலையில், 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 103.5 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக, 51.9 டி.எம்.சி.,யும் கிடைத்துள்ளது.
கடந்த செப்டம்பரில், 36.7 டி.எம்.சி.,க்கு பதிலாக, 40.7 டி.எம்.சி.,யும், அக்டோபரில் 20.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 53.4 டி.எம்.சி.,யும், நவம்பரில், 13.7 டி.எம்.சி.,க்கு பதிலாக, 17.6 டி.எம்.சி., நீரும் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பு டிசம்பர் மாதத்தில், 7.35 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். இதில், 3ம் தேதி வரை, 1.44 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, ஜூன் முதல் தற்போது வரை, 157.85 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு திறந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, 311.1 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. அங்குள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பியதால், அவற்றில் இருந்து காவிரியில் அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், தமிழகத்திற்கு, அதிகளவில் காவிரி நீர் கிடைத்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

