கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி
ADDED : ஜூலை 20, 2025 06:08 AM
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, 77, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
கருணாநிதி -- பத்மாவதி தம்பதியின் மகன் மு.க.முத்து; சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை 8:00 மணியளவில் இறந்தார். அவருக்கு மனைவி சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோர் உள்ளனர்.
மு.க.முத்து மறைவு செய்தி அறிந்ததும், ஈஞ்சம்பாக்கம் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின், மு.க.முத்துவின் உடல், கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, அவரது தம்பி தமிழரசு, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, வி.சி., தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, சேகர்பாபு, நடிகர் விக்ரம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆருக்கு போட்டி
இளம் வயதிலேயே தந்தை கருணாநிதியுடன், தி.மு.க., மேடைகளில் பாடல்களை பாடி கவனத்தை ஈர்த்தவர் மு.க.முத்து. அரசியல் களத்திலும், சினிமா உலகிலும், புகழின் உச்சத்தில் எம்.ஜி.ஆர்., இருந்த போது, அவருக்கு போட்டியாக சினிமாவில் முத்துவை, கருணாநிதி களம்இறக்கினார்.
பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள் என, பல படங்களில் நடித்தாலும், அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.
ஆனாலும், அவரது சொந்த குரலில் பாடிய, 'காதலின் பொன் வீதியில், எந்தன் மனதில் குடி இருக்கும் நாகூர் ஆண்டவா' போன்ற பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்டன.
கருணாநிதியுடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக வசித்த மு.க.முத்துவுக்கு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 5 லட்சம் ரூபாய் நிதி அளித்து உதவியது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின்: கருணாநிதி குடும்பத்தின் மூத்த பிள்ளை, அண்ணன் மு.க.முத்து மறைந்த செய்தி என்னை இடியென தாக்கியது.
தாய், தந்தைக்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன். என் வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர்.
எப்போது அவரை பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் மறைந்தாலும், அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும், பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும், முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
- நமது நிருபர் -