UPDATED : நவ 10, 2026 11:03 AM
ADDED : நவ 10, 2026 10:59 AM
கரூர்: கரூர் மாவட்டம், தனியாக செயல்பட துவங்கி, 31 ஆண்டுகளாகியும், மாவட்ட சிறைச்சாலை இல்லாத நிலை உள்ளது. இதனால் போலீசார், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திருச்சியில் இருந்து கடந்த, 1995ல், கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய மாவட்டம் துவங்கிய பிறகு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கரூரில் புதிதாக கட்டப்பட்டன.
மேலும், பல்வேறு துறைகளுக்கு கரூரில் தனியாக அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கரூரில் மாவட்ட சிறைச்சாலை கட்டப்படாததால், 80 கி.மீ., துாரம் உள்ள திருச்சி மத்திய சிறைக்கு, கைதிகளை போலீசார் அழைத்து செல்கின்றனர்.
நீதிமன்ற விசாரணைக்காக கைதிகளை ஆஜர்படுத்த, திருச்சி சென்று, கைதிகளை அழைத்து வர வேண்டிய நிலை போலீசாருக்கு உள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலையில் கிளை சிறை உள்ளது. அதில் அதிகபட்சமாக, 70 பேர் வரை அடைக்க முடியும். கொலை உள்ளிட்ட கொடூரமான சம்பவங்களில், ஈடுபட்ட கைதிகளை, திருச்சி மத்திய சிறைக்குதான் அழைத்து செல்ல வேண்டும். மேலும், கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி அழைத்து வர, நாள்தோறும் திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அரசு பஸ்களில் கூட கைதிகளை, பாதுகாப்பு இல்லாமல் அழைத்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் மாவட்ட தலைமை சிறை கட்ட, சிறைத்துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணி கிடப்பில் உள்ளது.
கைதிகளின் பாதுகாப்பு கருதி, கரூரில் மாவட்ட தலைமை சிறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் துவங்கிய பிறகு, பிரிக்கப்பட்ட சில மாவட்டங்களில் கூட, மாவட்ட சிறை கட்டப்பட்டுள்ளது. அதேபோல், கரூரில் கட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
