சினிமா ஆசை காட்டி சிறுமியை சீரழித்த கேரள நடிகை கைது
சினிமா ஆசை காட்டி சிறுமியை சீரழித்த கேரள நடிகை கைது
ADDED : ஆக 14, 2025 09:51 PM

சென்னை; பத்து ஆண்டுகளுக்கு முன், சினிமாவில் நடிக்க வைப்பதாக, 14 வயது சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கேரள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள, திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் மினு முனீர், 53; நடிகை. இவர், 2008ம் ஆண்டு கேரளாவில், 'டிவி' தொடர்களில் அறிமுகமானார். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சினிமாவில் நடிக்க வைப்பதாக, கேரளாவில் உள்ள தன் உறவுக்கார சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்தார். 14 வயதான அந்த சிறுமியை, தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார். அப்போது, சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்முறை செய்துள்ளனர். பின், சிறுமி கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
கேரள அரசு அமைத்துள்ள, ேஹமா கமிட்டி, சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலியல் தொல்லைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இக்கமிட்டியிடம், பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமியும் புகார் அளித்துள்ளார். அவருக்கு தற்போது, 24 வயது ஆகிறது. சம்பவம் நடந்த இடம் சென்னை திருமங்கலம் பகுதி என்பதால், கேரள மாநில போலீசார், சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, திருமங்கலம் மகளிர் போலீசார், கடந்த மார்ச் மாதம் மினு முனீர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அவரை கேரளாவில் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.