விவசாயியை அரிவாளால் வெட்டிய கொல்லிமலை தம்பதிக்கு '7 ஆண்டு'
விவசாயியை அரிவாளால் வெட்டிய கொல்லிமலை தம்பதிக்கு '7 ஆண்டு'
ADDED : நவ 20, 2025 02:31 AM
நாமக்கல், விவசாயியை அரிவாளால் வெட்டிய, கொல்லிமலையை சேர்ந்த தம்பதிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வாழவந்திநாடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 30; இவரது மனைவி சவீதா, 25. இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர்கள் ராமலிங்கம், 37, இவரது மனைவி சந்தோஷ்செல்வம், 36. இவர்களுக்கு இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த, 2018 மே, 9ல், சர்ச்சைக்குரிய இடத்தில் நட்டு வைத்திருந்த வாழை மரங்கள் மழைக்கு சாய்ந்தன. இதில், இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதில், கிருஷ்ணகுமாரை, ராமலிங்கம், அவரது மனைவி சந்தோஷ் செல்வம் ஆகியோர் அரிவாளால் வெட்டினர். இதில் கிருஷ்ணகுமார் படுகாயமடைந்தார். வாழவந்திநாடு போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து ராமலிங்கம், அவரது மனைவி சந்தோஷ் செல்வம் ஆகிய, இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி சண்முகபிரியா தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கம், அவரது மனைவி சந்தோஷ் செல்வம் ஆகிய இருவருக்கும், தலா, 7 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

