ADDED : நவ 12, 2025 01:50 AM

சென்னை, 'கோவளம் கடற்கரைக்கு, ஐந்தாவது ஆண்டாக நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது' என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
உலகம் முழுதும் துாய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பார்வையாளர் பாதுகாப்பு, சிறப்பு வசதிகள் அடிப்படையில், குறிப்பிட்ட சில கடற்கரைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவற்றை சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில், நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகின்றன .
சர்வதேச அமைப்பு வாயிலாக, ஆண்டு தோறும் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட கடற்கரையின் நிலை குறித்து, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் கோவளம் கடற்கரைக்கு, 2021ல் நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடற்கரையை அடிப்படையாக வைத்து, பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அடுத்தடுத்த ஆண்டுகள், கோவளம் கடற்கரைக்கு, இந்த சான்றிதழ் தொடர்ந்து கிடைத்து வந்தது. இந்நிலையில், ஐந்தாவது ஆண்டாக, தற்போது மீண்டும் நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது என, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம். இதை தொடர்ந்து, சென்னையில் 4; கடலுாரில், 2; விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய நகரங்களில் தலா ஒன்று என, மொத்தம், 10 கடற் கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

