ரயில் நிலையங்களில் 10 மாதத்தில் 1,759 சிறுவர்களை மீட்ட அதிகாரிகள்
ரயில் நிலையங்களில் 10 மாதத்தில் 1,759 சிறுவர்களை மீட்ட அதிகாரிகள்
ADDED : நவ 12, 2025 01:49 AM
சென்னை: 'தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில், 10 மாதங்களில் மட்டும், 1,759 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்' என, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில், கடந்த 10 மாதங்களில் மட்டும், 1,759 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதில், 378 பேர் சிறுமியர். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில், 1,441 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்; இதில், 304 பேர் சிறுமியர்.
பெரும்பாலான ரயில் நிலையங்களில், குழந்தை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் சிறுவர், சிறுமியர் மீட்கப்படும் போது, குழந்தைகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவர். பின், மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவர்.
பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை, அரசு நல குழுவிடம் அல்லது தன்னார்வ அமைப்பு களிடம் இருப்பர்.
ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர், சிறுமியருக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது, ரயில்வே உதவி எண் 139, குழந்தை உதவி மையம் எண் 1098 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

