போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கோயம்பேடு பஸ் நிலையம்: கிளாம்பாக்கம் செல்ல இலவச மாநகர பஸ் சேவை
போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கோயம்பேடு பஸ் நிலையம்: கிளாம்பாக்கம் செல்ல இலவச மாநகர பஸ் சேவை
UPDATED : ஜன 24, 2024 09:14 PM
ADDED : ஜன 24, 2024 07:54 PM

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுஉள்ளது. சென்னயிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இலவசமாக மாகநகர பேருந்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தைபூசம், குடியரசு தினவிடுமுறை, சனி,மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் காவல்துணை ஆணையர் உமையாள் தலைமையில்100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தடுப்புகள் அமைத்து கோயம்பேடு பஸ்நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் போலீசார். மேலும் இரவு 7.30 மணிக்கு பிறகு ஆம்னி பஸ்சில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.மேலும் பயணிகள் வசதிக்காக உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோயம்பேடு வரும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
முன்னதாக ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில்இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும். என போக்குவரத்து துறை உத்தரவிட்டு இருந்தது. அதே நேரத்தில் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லை என ஆம்னி பஸ் சங்க தலைவர் அன்பழகன் கூறினார்.
இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு சென்ற ஆம்னி பஸ்கள் நாளை காலை அல்லது பிற்பகல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும். மீறி கோயம்பேடு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரம் உள்ளே ஆம்னி பஸ்கள் வருவதை கண்காணிக்க போலீசார் சோதனையிட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு இலவசமாக மாநகர பேருந்துகளை தொடர்ந்து தாம்பரத்திற்கு கிளாம்பாக்கத்திற்கு இலவச பேருந்து சேவைகளையும் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்த பணிகள் மார்ச்சுக்குள் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் கோரிக்கையை ஏற்று ஜன. 24 ல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பஸ் இயக்க ஆம்னி ஆப்ரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

