புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு.
புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு.
ADDED : செப் 28, 2024 03:04 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, மே 23ல் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். பின், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். இதனால், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.
மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஜூலையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. கடந்த வாரம் அவரை நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதிக்கு மலர் கொத்து வழங்கி, கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். கவர்னருக்கு தலைமை நீதிபதியும் மலர் கொத்து வழங்கினார்.
பின், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், புதிய தலைமை நீதிபதிக்கு மலர் கொத்து வழங்கினார். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன், இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.