ADDED : டிச 13, 2024 08:44 PM
சென்னை:ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சுதந்திரத்திற்கு பின், 1952 முதல் 1967 வரை, லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. அதன்பின், மாறி மாறி தேர்தல்கள் நடந்து வருகின்றன. 1996, 1998, 1999 என, நான்கு ஆண்டுகளில் மூன்று முறை லோக்சபா பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல்களும், ஒரே நேரத்தில் நடத்தப்படாமல், ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என, தனித்தனியாக பிரித்து நடத்தப்படுகின்றன. இதனால், மக்கள் எப்போதும் தேர்தலை எதிர்நோக்கியே இருக்கக்கூடிய ஒரு மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால், மக்களும் ஊழல்படுத்தப்படுகிறார்கள். இதற்கு தீர்வாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை, புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. இந்த சீர்திருத்தத்தின்போதே, விகிதாசார தேர்தல் முறையையும், ஐந்து ஆண்டுகளுக்கு பதிலாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பதையும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

