கோலாலம்பூர் - கோழிக்கோடு விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
கோலாலம்பூர் - கோழிக்கோடு விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
ADDED : ஆக 16, 2025 01:58 AM
சென்னை:மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்ற, 'ஏர் ஏசியா விமானம்' அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த பயணியர் பீதி அடைந்தனர்.
கோலாலம்பூரில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு, சென்னை வான்வெளியை நெருங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதற்கான, எச்சரிக்கை அலாரம் அடித்தது. இதையடுத்து, விமானி அருகில் இருந்த சென்னை விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார்.
இது குறித்து, ஏ.டி.சி., எனும் விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக விமானத்தை தரையிறக்க அறிவுறுத்தினர். விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு தரையிறங்கியது. அதில் இருந்த பயணியர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமானப் பொறியாளர்கள் குழு, விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் இறங்கினர். ஆனால், சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, பயணியர் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மாலை மாற்று விமானத்தில் கோழிக்கோடு சென்றனர்.