கள்ளச்சாராய வழக்கில் கைதான 18 பேரின் 'குண்டாஸ்' ரத்து
கள்ளச்சாராய வழக்கில் கைதான 18 பேரின் 'குண்டாஸ்' ரத்து
ADDED : ஜன 07, 2025 07:44 AM
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதானவர்களில், 18 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர். கடந்தாண்டு ஜூன் 19ல் இந்தச் சம்பவம் நடந்தது.
இதில் தொடர்புடைய, 24 பேர் கைது செய்யப்பட்டனர்; அதில், 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் தடுப்பு சட்ட கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரின் உறவினர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'காலதாமதமாக குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
'அதுதொடர்பான ஆவணங்கள், மொழி பெயர்த்து வழங்கப்படவில்லை. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கைதானவர்கள் ஐந்து மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதற்கு மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் வைத்திருக்க வேண்டிய தேவை என்ன? கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டிய மதுவிலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன், மரக்காணத்திலும் இதுபோல சம்பவம் நடந்துள்ளது. சிறப்பு பிரிவான மதுவிலக்கு துறையின் செயல்பாடு தோல்வி அடைந்துள்ளது என்பதை, இது காட்டுகிறது.
மதுவிலக்கு பிரிவால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கு மேல் ஜோடிக்கப்பட்டவை. பல தவறுகளை செய்கின்றனர்.
தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. கள்ளச்சாராய விற்பனை சம்பவங்களில், முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர், 'இந்த சம்பவத்தில், 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
'இச்சம்பவத்துக்கு பின், 110 நாட்கள் வரை, அந்த கிராமங்களில் அசாதாரண நிலை தொடர்ந்தது. பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தியதால், குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது' என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அவர்களுக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவில்லை.
'குண்டர் தடுப்பு சட்டம் என்பது, அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை குறைப்பதாகும்' எனக்கூறி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தனர்.