ADDED : ஆக 17, 2025 01:36 AM

சென்னை:உடல்நலக் குறைவால் மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் உடல், முப்படையினர் மரியாதையுடன், சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில், தகனம் செய்யப்பட்டது.
தமிழக பா.ஜ., மூத்த தலைவரும், நாகாலாந்து கவர்னராக இருந்தவருமான இல.கணேசன், 80, கடந்த 8ம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
இல.கணேசனின் உடல், தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை, இல.கணேசனின் உடல், தி.நகர் மாநகராட்சி விளையாட்டு திடலில், பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் முருகன், துணை முதல்வர் உதயநிதி, தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா., தலைவர் வாசன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, நடிகர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, தலைமை செயலர் முருகானந்தம், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு ராணுவ வாகனத்தில், இல.கணேசன் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, முப்படை வீரர்கள் மரியாதையுடன், 42 குண்டுகள், மூன்று முறை முழங்க தகனம் செய்யப்பட்டது.
நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ, அம்மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
கவர்னர் ரவி, மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, சுப்பிரமணியன் உள்ளிட்டோர், இல.கணேசனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
மோடி சார்பில் அஞ்சலி இல.கணேசன் உடலுக்கு, நேற்று பகல் 12:15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது, பிரதமர் மோடி சார்பில் மலர் வளையம் வைத்து, ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.