UPDATED : அக் 09, 2026 05:56 PM
ADDED : அக் 09, 2026 05:54 PM
சென்னை: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு, 15 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை விற்பனை பத்திரத்தில், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சொத்து மதிப்பு குறிப்பிடப்படும். இதற்காக, ‘சர்வே’ எண், தெரு வாரியாக நில வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டி மதிப்புகள், 10 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், பல இடங்களில் சர்வே எண்ணுக்கு மதிப்பு இல்லை.
குடியிருப்பு பகுதிகளில் ஒரு கடை இருந்தால், அங்கு வணிக பகுதி மதிப்பை கடைப்பிடிக்க முடியாமல் உள்ளது. பெரும்பாலான இடங்களில் வகைப்பாடு மாற்றம் மற்றும் மதிப்பு விஷயத்தில், முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இதை சரி செய்யும் வகையில், கிராமம், சார் பதிவக எல்லை வாரியாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான குழுக்கள் தயாரித்த இந்த வரைவு மதிப்புகள், மாவட்ட அளவில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில வழிகாட்டி மதிப்புகளில் உள்ள முரண்பாடுகளை களையும் பணி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் புதிய வழிகாட்டி மதிப்புகள், வழக்கத்தை விட, 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். இந்த வரைவு அறிக்கைக்கு, மாநில மையக்குழு ஒப்புதல் பெற்றதும், புதிய மதிப்புகள் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
