ADDED : ஜூன் 17, 2026 06:03 AM

சென்னை: தமிழகத்தில், வீடு, மனை போன்ற சொத்து வாங்குவோர், பத்திரப்பதிவின் போதே, பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' முறையில், இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும்போது, பட்டாவின் பிரதி மட்டுமே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பெயர் மாற்றம் செய்து, புதிய பட்டா வழங்கும்போது, நில அளவை வரைபடம் இணைத்து தர வேண்டும். ஆனால், பட்டா பிரதி மட்டுமே, 'தமிழ் நிலம்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதனால், பட்டா பிரதி பெற்றவர்கள், நில அளவை வரைபடத்துக்காக, மீண்டும் தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவை எழுகிறது.
இவ்வாறு நேரில் செல்லும்போது, நில அளவை வரைபடத்துக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இணையதளத்தில் பட்டா பிரதியை பதிவேற்றும்போது, நில அளவை வரைபடத்தையும் பதிவேற்ற வேண்டும் என்பது நடைமுறை.
இதில், ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்யும்போது, நில அளவை வரைபடம் கட்டாயமாக கிடைக்க வேண்டும். இணையதளத்தில் வரைபடம் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், அது பெயரளவுக்கே இருக்கிறது.
பொது மக்கள் பதிவிறக்கம் செய்யும்போது, வரைபடம் கிடைப்பதில்லை என புகார் வருகிறது. இது தொடர்பான தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய, அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இனி பட்டாவுடன் நில வரைபடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
