கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவர்கள் பொறுப்பு: உதயநிதி
கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவர்கள் பொறுப்பு: உதயநிதி
ADDED : செப் 29, 2025 01:37 AM

கரூர், செப். 29-
த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஆறுதல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாம் அத்தனை பேரும் ஆதரவாக இருக்க வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அதே இடத்தில், இரு நாட்களுக்கு முன் கூட்டம் நடத்தியுள்ளார். எவ்வளவு கூட்டம் வரும் என சொல்லி அனுமதி கேட்டனர். அவர்களுக்கு போதுமான அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
விஜய் நடத்திய பிரசார கூட்டத்துக்கும் அதிக அளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கூட்டம் எவ்வளவு கால தாமதமாக துவங்கியது என்பதை, போலீசார் தங்களுடைய விளக்கத்தில் கூறியுள்ளனர்.
மரத்தில் ஏற வேண்டாம்; மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பல கோரிக்கைகளை போலீசார் வைத்துள்ளனர்.
ஆனாலும், கூட்டத்தினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர், இரண்டாம் கட்ட தலைவர்களுடைய பொறுப்பாகும்.
இவ்வாறு உதயநிதி கூறினார்.