'கோவில் நிலத்தில் திருமண மண்டபம் அமைக்க சட்ட போராட்டம் நடத்தப்படும்'
'கோவில் நிலத்தில் திருமண மண்டபம் அமைக்க சட்ட போராட்டம் நடத்தப்படும்'
ADDED : அக் 16, 2025 02:40 AM

சென்னை: ''சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்று, கோவில் நிலங்களில் திருமண மண்டபங்கள் கட்டி தரப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பன்னீர்செல்வம்: சீர்காழி, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு திருமண மண்டபம் கட்டி தர வேண்டும். கோவில் சப்பரம் பழுதடைந்துள்ளதால், அதற்கு பதிலாக தேர் செய்து தர வேண்டும். திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோவில் குளத்தை துார்வாரி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நவம்பர் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு பெற்று, திருமண மண்டபம் கட்டப்படும்.
கோவில் குளத்தை துார்வாரி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர் வீதியுலா வருவதற்கு சாத்தியக்கூறு இருந்தால், செய்து தரப்படும்.
தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய இடங்களில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
இங்கு நவீன வசதிகளுடன் திருமண மண்டபங்களை கட்டி, பக்தர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், ஹிந்துக்களின் திருமணங்கள் நடப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில், கோவில் நிலங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.
அதன்படி, 82 திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நல்ல மனம் கொண்டோர் சிலர், அறையில் உட்கார்ந்து தீட்டும் திட்டங்களால், திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு தடையாணை பெறப்பட்டு உள்ளது. சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்று, திருமண மண்டபங்கள் கட்டி தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.