UPDATED : ஏப் 05, 2025 05:18 AM
ADDED : ஏப் 04, 2025 11:30 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, இரைக்காகஅடித்துக்கொன்ற கன்றுக்குட்டியை மீண்டும் ருசி பார்க்க வந்த சிறுத்தையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், கூண்டு வைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ஆதியூரில், பாலசுப்ரமணியம் என்பவரது தோட்டத்தில் பசு கன்றை சிறுத்தை கடித்து கொன்றது.
அங்கு பதிவான கால் தடங்களை கண்ட விவசாயிகள், பொதுமக்கள், சிறுத்தை தான் கன்றுக்குட்டியை அடித்து கொன்றதாகவும், பாதுகாப்பாக இருக்குமாறு தகவல்களை பரப்பினர். இது காட்டுத்தீ போல பரவியதால் சுற்றுப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கடந்த, இரண்டு நாட்களாக நடமாட்டம் உள்ளதையடுத்து, பொதுமக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் கன்றுக்குட்டி இறந்த இடத்தில் சிறுத்தை வருகிறதா என கண்காணிப்பு செய்தனர். அப்போது, அதே இடத்துக்கு வந்த சிறுத்தை, இறந்த கன்றுக்குட்டியை உட்கொள்ள துவங்கியது. அப்போது, வனத்துறையினரை கண்டதும் சிறுத்தை தப்பியோடியது.
இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், அங்கு கூண்டு வைத்து, அதில், இறந்த கன்றுக்குட்டியின் உடலை போட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி வரையாடு திட்டத்தின் துணை இயக்குனர் கணேஷ்ராம் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர், வனத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விவசாயிகள், பொதுமக்களிடம் விசாரித்தனர்.
பாதுகாப்பாக இருங்க!
நீலகிரி வரையாடு திட்டத்தின் துணை இயக்குனர் கூறுகையில், ''மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அங்கு மூன்று கூண்டுகள், பத்து கேமராக்கள் வைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜமீன் ஆதியூரில் தோட்டத்துச்சாளையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கொன்றது உறுதி செய்யப்பட்டது. தற்போது, இங்கு ஒரு கூண்டு வைத்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தோட்டத்துச்சாளையில் இருந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம், நாய் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை தனியாக விளையாட விட வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், 'தண்டோரா' போட்டு பொதுமக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு, கூறினார்.