ADDED : அக் 31, 2024 11:45 PM

'வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை பலப்படுத்துவோம்' என, அக்கட்சியின், 53வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டங்களில், தமிழகம் முழுதும், முன்னாள் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, செங்கோல் பரிசு வழங்கி, அவரை முன்னிலைப்படுத்தும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது, பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், தமிழகம் முழுதும் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகின்றனர். சமீபத்தில், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், செம்மஞ்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். முன்னதாக, அவருக்கு மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேடையின் முகப்பு, தலைமை செயலகம் வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கூட்டத்தில் பங்கேற்ற வேலுமணிக்கு, செங்கோல் பரிசும் வழங்கப்பட்டது.
முதல்வர் வேட்பாளருக்கும், கட்சியின் தலைமைக்கும் மட்டுமே தொண்டர்கள் செங்கோல் வழங்குவது வழக்கமாம். ஆனால், தலைமை நிலைய செயலர் என்ற பதவியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணிக்கு செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகம் முழுதும் கட்சியை பலப்படுத்த எஸ்.பி.வேலுமணியை முன்னிலைப்படுத்தும் புது முயற்சியில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, ஏற்கனவே ஆறு முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடம் முறையிட்டனர். அதற்கு பழனிசாமி, 'நீக்கப்பட்டவர்களை இனி கட்சியில் சேர்க்க முடியாது' என, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், சசிகலா மரியாதை செலுத்திய பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பது எங்களின் வேலை; மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தான் முதல்வர்' என்றார்.
இதற்கிடையில், அ.தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தல் திட்டத்தை பழனிசாமி தவிர்த்துள்ளார். வரும் டிசம்பர் இறுதியில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலராக தன்னை மீண்டும் தேர்வு செய்த பின், உட்கட்சி தேர்தல் நடத்தி, தனக்கு ஆதரவானவர்களை, மாவட்ட செயலர்கள், ஒன்றிய, நகர, கிளை செயலர்களாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கும் திட்டமும் வைத்துள்ளார்.
அதனால், சசிகலா ஆதரவுடன் கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கும், முதல்வர் வேட்பாளர் பதவிக்கும் எஸ்.பி.வேலுமணி வந்து விடக்கூடாது என்பதற்காக, அவருக்கு செக் வைக்கும் வகையில், பழனிசாமி காய் நகர்த்த துவங்கியுள்ளார்.
அதே நேரத்தில், பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், பொதுக்குழுவில் கட்சி ஒற்றுமை குறித்து பேசுவதற்கும், ஆறு முன்னாள் அமைச்சர்களும், அவர்களின் ஆதரவு மாவட்ட செயலர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், முன்னாள் அமைச்சர்களின் முயற்சி பலிக்குமா என்பது பின்னர் தான் தெரிய வரும்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
செங்கோல் வழங்குவது ஒன்றும் புதிதல்ல!
எஸ்.பி.வேலுமணிக்கு செங்கோல் வழங்கியது குறித்து, அ.தி.மு.க., இலக்கிய அணி மாநில துணைச்செயலர் பட்டுக்கோட்டை சின்ன சுவாமிநாதன் கூறியதாவது:
செங்கோலை முதன் முதலாக எம்.ஜி.ஆரிடம் வழங்கியது பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கந்தசாமி தேவர். அதன்பின், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவும் வழங்கியுள்ளார். ஜெயலலிதாவுக்கும், பழனிசாமிக்கும் பலமுறை செங்கோல் வழங்கப்பட்டது.
முதல்வர் வேட்பாளருக்கு மட்டும் செங்கோல் வழங்கப்படுவதில்லை. பொதுவாக அரசியல் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கும், செல்வாக்கு பெற்றவர்களுக்கும் வழங்கப்படுகிறது. தொண்டர்கள் விருப்பத்தின் படி தான் செங்கோல் வழங்கப்படுகிறது. செங்கோல் கொடுப்பதால் மட்டும், ஒருவர் முதல்வர் வேட்பாளராக முடியாது. அதேசமயம், முதல்வர் வேட்பாளருக்கு தான் செங்கோல் வழங்க வேண்டும் என, எந்த விதிமுறையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-