உறுப்பினர் செயலர் பெயரில் கீழ்நிலை அதிகாரிகள் கடிதம் சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி
உறுப்பினர் செயலர் பெயரில் கீழ்நிலை அதிகாரிகள் கடிதம் சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி
ADDED : மார் 09, 2024 08:30 PM
சென்னை:கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான கடிதங்களில், உறுப்பினர் செயலருக்கு தெரியாமல், அவரது பெயரில் கீழ் நிலை அதிகாரிகள் கையெழுத்திடுவதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்குகிறது. இதில், அனைத்து வகை கட்டடங்களுக்கும், ஒப்புதல் அளிக்கும் கோப்புகள் தொடர்பான கடிதங்கள், உறுப்பினர் செயலர் பெயரிலேயே விண்ணப்பதாரர்களுக்கு செல்லும்.
இந்த நடைமுறை சரியல்ல என்று தெரிய வந்ததால், 2018ல் உறுப்பினர் செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, அதிகார பகிர்வு தொடர்பான நடைமுறைகளை அமல்படுத்தினார்.
இதன்படி, 10,763 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, துணை திட்ட அலுவலர் பொறுப்பு. அதற்கு மேல், 53,819 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, தலைமை திட்ட அதிகாரி ஒப்புதல் வழங்கலாம்.
இவற்றுக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே, உறுப்பினர் செயலரின் பெயரில் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
இந்த வரையறைக்கு உட்பட்டு வரும் விண்ணப்பங்கள், கோப்புகள் தொடர்பாக கடிதங்கள் அனைத்தும், அதற்கு பொறுப்பான அலுவலர் பெயரில், அவரது கையெழுத்துடன் தான் செல்ல வேண்டும்.
இந்த நடைமுறை சில ஆண்டுகளாக அமலில் இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பிரிவு அதிகாரிகள், தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனுமதி கடிதங்களில் கையெழுத்திடுவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, 10,763 சதுரடி வரையிலான கட்டுமான திட்ட அனுமதி கடிதம், துணை திட்ட அலுவலர் பெயரில் தான் செல்ல வேண்டும்.
ஆனால், இக்கடிதங்கள், உறுப்பினர் செயலருக்கான பொதுவான, 'லெட்டர் பேடில்' அனுப்பப்படுகின்றன. அதில், உறுப்பினர் செயலருக்காக என்று குறிப்பிட்டு, உதவி திட்ட அலுவலர்கள் கையெழுத்திடுகின்றனர்.
இந்த கடிதங்களை பெறும் பொதுமக்கள், இது தொடர்பான முறையீடு ஏதாவது இருந்தால், உறுப்பினர் செயலருக்கு தான் கடிதம் எழுத வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, அந்த கடிதத்தில் உள்ள விபரங்கள் தொடர்பாக சட்ட சிக்கல் இருந்தால், உறுப்பினர் செயலர் பெயரில் தான் வழக்கு தொடர நேரிடும்.
சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்பது வசதியாக மறைந்து விடும். எனவே, கட்டுமான திட்ட அனுமதியில், நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடிதங்களில் முறையாக பொறுப்பாக்க வேண்டும்.
அப்போது தான், அவர்கள் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வர். இந்த விஷயத்தில், 2018, 19ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை முறையாக அமல்படுத்த, உறுப்பினர் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே, அதிகாரிகள் அலட்சியத்தால் வழக்குகள் வருவது தடுக்கப்படும். பொது மக்களுக்கும் தெளிவான பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

