ADDED : நவ 15, 2024 11:51 PM
சென்னை:தமிழகத்தில் வழக்கமாக ஆகஸ்ட் மாதம், சம்பா சாகுபடி பணியில், விவசாயிகள் கவனம் செலுத்துவது வழக்கம். நடப்பாண்டு பல மாவட்டங்களில், பருவமழை தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காலதாமதமாக நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது வரை சாகுபடி பரப்பு, 25 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் 30 லட்சம் ஏக்கரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிர் பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய, தமிழக வேளாண் துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது.
காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்து விட்டது. புதிதாக நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு, காப்பீடு செய்ய வேண்டிஉள்ளது.
கால அவகாசம் முடிந்துள்ளதால், மழை, வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை, இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, மத்திய வேளாண் துறைக்கு, தமிழக வேளாண் துறை செயலர் அபூர்வா கடிதம் எழுதியுள்ளார்.

