நடிகர் விஜய் எழுதிய கடிதம் மாணவியரிடம் வினியோகம்; த.வெ.க.,வினர் கைது
நடிகர் விஜய் எழுதிய கடிதம் மாணவியரிடம் வினியோகம்; த.வெ.க.,வினர் கைது
ADDED : டிச 30, 2024 11:58 PM

சென்னை : பாலியல் வன்கொடுமை தொடர்பாக, நடிகர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக, மாணவியரிடம் வினியோகம் செய்த த.வெ.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
த.வெ.க., தலைவர் விஜய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தன் கையால் எழுதிய கடிதம்: கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் என, அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று, பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்; அண்ணனாகவும், அரணாகவும்.
எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை கல்லுாரிகள் முன் நின்று மாணவியருக்கும், பொது இடங்களில் பெண்களுக்கும் வினியோகம் செய்ய, கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கல்லுாரிகளுக்கு வெளியே இந்த கடிதப் பிரதியை மாணவியருக்கு வழங்கினர்.
முன் அனுமதியின்றி, சென்னை தி.நகரில் கடிதம் வினியோகம் செய்ததாக கூறி, அக்கட்சி பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
அப்போது அங்கே திரண்ட 150க்கும் மேற்பட்டவர்கள், போலீசாருக்கும், அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்; அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.