13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 'போக்சோ' வழக்கில் ஆயுள்
13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 'போக்சோ' வழக்கில் ஆயுள்
ADDED : ஜன 01, 2025 10:22 PM
சென்னை:சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, பூக்கடை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2023ல் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் சையது இப்ராகிம், 43 என்பவர், தன் இரு சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக சிறுமியை அழைத்து சென்று உள்ளார். பின், வீட்டினுள் சிறுமியை தள்ளி அடித்துஉள்ளார்.
இதில் மயங்கிய சிறுமியை, சையது இப்ராகிம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால், தம்பியை கொலை செய்து விடுவதாக, சிறுமியை மிரட்டியுள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதில் உடல் ரீதியாக சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, பூக்கடை மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், சையது இப்ராகிம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2023 டிசம்பரில் பதிவான இந்த வழக்கை, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார்.
சையது இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 'போக்சோ' குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும்; கடத்தல் குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதத் தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்குவதோடு, தமிழக அரசும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓராண்டுக்குள் அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து, நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்துள்ளது.