ADDED : அக் 01, 2024 06:10 AM
விழுப்புரம்: மயிலம் அருகே கள்ளத்தொடர்பு பிரச்னையில் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த வெளியனுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 38; மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி, 35; இவருக்கும், தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த கலியமூர்த்தி, 45; என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த முருகன், கண்டித்தார். இதுகுறித்து பாக்கியலட்சுமி, கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கலியமூர்த்தி, கொடிமா கிராமத்தை சேர்ந்த சங்கர், 42; என்பவரும், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு 9:.00 மணிக்கு முருகனை கொடுக்கூர் ஆற்றுப்பாலம் அருகே அழைத்து வந்தனர். அங்கு, 3 பேரும் மது அருந்தினர். போதையிலிருந்த முருகனின் கழுத்தை, கலியமூர்த்தி நைலான் கயிற்றில் இறுக்கி கொலை கொலை செய்து, பாலம் அருகே புதைத்துள்ளனர்.
பின், முருகனை காணவில்லை என மயிலம் போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, கலியமூர்த்தி, சங்கர், பாக்கியலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட கலியமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சங்கர், பாக்கியலட்சுமி விடுதலை செய்யப்பட்டனர்.