கமல் போல் விஜயும் எதிர்காலத்தில் தி.மு.க.,வில் ஐக்கியம் ஆவார்-- சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
கமல் போல் விஜயும் எதிர்காலத்தில் தி.மு.க.,வில் ஐக்கியம் ஆவார்-- சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
ADDED : ஆக 25, 2025 01:29 AM
ராஜபாளையம்: ''அ.தி.மு.க., - பா.ஜ. கூட்டணி வெற்றி பெற கூடாது என்பதற்காக விஜயை தி.மு.க., இந்த தேர்தலில் களம் இறக்கி உள்ளது. கமல் போல் விஜயும் எதிர்காலத்தில் தி.மு.க.,வில் ஐக்கியமாவார்'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது:
ஹிந்து கடவுள்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஈடுபடுகிறது. ஹிந்து சமய வழிபாட்டு முறைகள் குறித்து தவறாக பேசிய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, நீதிமன்றத்தில் பொன்முடிக்கு ஆதரவாக அரசு அறிக்கை அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் விலங்குகளை பலியிடுவதற்கு அறநிலையத் துறை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தில் சிக்கந்தர் மலை என்பதற்கான சான்றுகள் உள்ளதாக அரசு கூறுவதும் இரட்டை நிலைப்பாடு.
எல்லோருக்குமான அரசு என்று கூறிவிட்டு ஹிந்து விரோதமாக தி.மு.க., அரசு செயல் படுகிறது. தேர்தலுக்கு தேர்தல் புதிதாக எதிர்க்கட்சிகளை உருவாக்குவது தி.மு.க.,வின் வழக்கம். இந்த தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக நடிகர் விஜயை தி.மு.க., களம் இறக்கி உள்ளது. நடிகர் கமல் போல் இவரும் எதிர்காலத்தில் தி.மு.க.,வில் ஐக்கியமாவார். தி.மு.க.,வின் ஊது குழலாகவே மத்திய அரசை விஜய் விமர்சித்து வருகிறார்.
விஜய்க்கு அவரது ரசிகர் மீது எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.
மதுரை மாநாட்டில் அவர் கண் முன்னே ரசிகரை துாக்கி எறிவதை கண்டும் காணாமல் சென்றதில் இருந்து இது தெரிகிறது என்றார்.