பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை துாக்கும் தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை துாக்கும் தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’
ADDED : நவ 04, 2026 08:56 PM

– நமது நிருபர் குழு –: சங்க அங்கீகார தேர்தல், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, சுமை துாக்கும் தொழிலாளர்கள் இன்று (நவ.,4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மண்டல அலுவலகத்தில், சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் மாநில இணை செயலர் சதீஷ்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்க அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த, 2025 ஆகஸ்டு-க்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட, 60 சதவீத சம்பள உயர்வை வழங்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து கோஷமிட்டனர்.
புதுக்கோட்டையில், தமிழக நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தை, சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டனர். வேலுாரில், நுகர்பொருள் வாணிப கிடங்கை, 80க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூரில், நுகர்பொருள் வாணிபக்கழக சுமை துாக்குவோர், 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில், டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட தலைவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். சிவகங்கையில், நுகர்பொருள் வாணிப கழக சுமை துாக்கும் தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’ கால், 2,000 டன் ரேஷன் பொருட்கள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது.
