ADDED : அக் 12, 2024 07:54 AM

திருப்பூர்: தமிழகத்தில் கோவில் விழாக்களை குலைக்கும் வகையில் மாநில அரசு செயல்படுகிறது, என ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்டும்; மின்கம்பியில் உரசி அசம்பாவிதம் நிகழ்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல' என மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
பல லட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவில் உரிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டியது அரசின் கடமை. ஹிந்துக்கள் ஒற்றுமையாக வழிபடும் திருவிழாவை தமிழக அரசு தடுக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
பல ஆண்டுகளாக அதே பாதையில் தேர் பவனி நடக்கும் நிலையில், தற்போது அதன் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது வியப்பாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோவிலில் இரண்டு முறை கோர்ட் உத்தரவிட்டும் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகே இது நடந்தது. நெல்லையில் வழக்கம்போல் திருவிழா நடைபெற அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

