மெட்ரோ ரயிலுக்கு தகுதி இல்லாத மாநகரா மதுரை; மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு
மெட்ரோ ரயிலுக்கு தகுதி இல்லாத மாநகரா மதுரை; மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு
ADDED : நவ 20, 2025 08:40 AM

மதுரை: மதுரையில் ரூ. 11,368 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை போதிய மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை முன்வைத்து மத்திய அரசு முடக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நகரில் ஆண்டுதோறும் வாகனங்களின் பெருக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நகரின் குறுகிய ரோடுகளால் போக்குவரத்து நெருக்கடி சவாலாக உள்ள நிலையில், பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதற்கேற்ப மாநில அரசும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி திருமங்கலம் முதல் பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஐகோர்ட் கிளை வழியாக ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை உள்ள 32 கி.மீ., துாரத்திற்கு 26 நிறுத்தங்கள் கொண்ட இத்திட்டத்திற்கான செயல் திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.,) 19.2.2024 ல் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அதன் பின் சில திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்திய நிலையில் அதற்கான நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டது.
மெட்ரோ திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிய நிலையில், 20 லட்சம் மக்கள் தொகை மதுரையில் இல்லை எனக் கூறி மத்திய அரசு ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் ஆக்ரா (16 லட்சம்), பீகாரின் பாட்னா (17 லட்சம்), போபால் (18 லட்சம்) உட்பட பல்வேறு நகரங்களில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில மாதங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவால் பா.ஜ., மட்டுமின்றி அதன் கூட்டணியான அ.தி.மு.க.,வுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களே 27 லட்சம்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரையில் 15 லட்சம் மக்கள் தான் உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 17 லட்சம் என்பதே சரி. மதுரை மக்கள் தொகை என்றால், மாவட்டப் பகுதியில் உள்ள மக்கள் எண்ணிக்கையும் கணக்கில்கொள்ள வேண்டும். 2011 கணக்கெடுப்பில் இருந்து மாநகராட்சி பகுதி மக்களை மட்டுமே மத்திய அரசு கணக்கில் எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் புறநகரில் உள்ள திருமங்கலத்தில் துவங்கி மாநகாட்சி பகுதி வழியாக மீண்டும் புறநகர் பகுதியான ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை செல்கிறது. அதன்படி பார்த்தால் புறநகரையும் சேர்த்தால் அப்போதே 20 லட்சம் மக்கள் தொகையை எட்டியிருக்கும்.
தற்போது மாநகராட்சியில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேல் மக்கள் உள்ளனர். புறநகரையும் சேர்த்தால் 30 லட்சத்தை தாண்டும். மாவட்டத்தின் வாக்காளர்களே தற்போது 25 லட்சம். புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த ஜனவரியில் வெளியாகும் போது அது 27 லட்சமாகும்.
மெட்ரோ திட்டம் இப்போது துவங்கி 5 ஆண்டுகள் கழித்து முடியும் போது மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கும். ஆனால் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இத்திட்டத்தை திருப்பி அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

