ஏழு முறை கட்சி தாவிய மைத்ரேயன்; தி.மு.க.,வில் ஐக்கியம்
ஏழு முறை கட்சி தாவிய மைத்ரேயன்; தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 14, 2025 07:11 AM

சென்னை: தி.மு.க.,வில் இணைந்த, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், ''உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது; பழனிசாமியால் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது,'' என்றார்.
அ.தி.மு.க., அமைப்புச் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான மைத்ரேயன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் சேர்ந்தார்.
அப்போது, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சுப்பிரமணியன், அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தி.மு.க.,வில் இணைந்த பின், மைத்ரேயன் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழகம் மிகப்பெரிய அளவில் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்திற்கு யார் என்பதற்கு தான் தேர்தல் நடக்க உள்ளது.
அ.தி.மு.க.,வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. பல நிர்வாகிகள் மனப்புழுக்கத்தில் இருக்கின்றனர். ஒரு சிலர், கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துள்ளனர்.
எனக்கு அமைப்புச் செயலர் பதவி தந்தனர். ஆனால், என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அங்கிருந்து வெளியே வந்தேன்.
பிரசார பயணத்துக்காக, கூட்டி வரப்படும் கூட்டத்தை பார்த்து, எம்.ஜி.ஆர்., போல, ஜெயலலிதாவை போல, தன்னையும் ஒரு பெரிய தலைவர் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார்; உயர, உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்து ஆகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்கெங்கே, எப்போது?
பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., என, மூன்று கட்சிகளுக்கு இடையே, ஏழு முறை தாவியவர், மைத்ரேயன். கடந்த 1995 - 1999ல் தமிழக பா.ஜ.,வில் பொதுச்செயலர், துணைத் தலைவர் பதவிகளில் இருந்தார். 1999 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., சேர்ந்ததால், எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
கடந்த 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு பின், அ.தி.மு.க., சார்பில் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். ஜெயலலிதா மறைந்த பின், பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகளுக்கு மாறி மாறி தாவினார்.
பின்னர், அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காததால், பா.ஜ.,வில் இணைந்தார். அங்கு கவர்னர் பதவி தராததால், மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு திரும்பினார். அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்து, தி.மு.க.,வில் தற்போது இணைந்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன். உடன், துணை முதல்வர் உதயநிதி.