மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: இரும்பு - அயோடின் கலந்த உப்பு வழங்க தமிழக அரசு முடிவு
மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: இரும்பு - அயோடின் கலந்த உப்பு வழங்க தமிழக அரசு முடிவு
ADDED : செப் 05, 2025 12:25 AM
சென்னை:நுண்ணுாட்டச் சத்து குறைபாடு பாதிப்பு அதிகரித்து வருவதால், இரும்புச்சத்து, அயோடின் கலந்த, 'டபுள் 45' உப்பு பயன்பாட்டை பொதுமக்களிடையே அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை சார்பில், 'நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை கட்டுப்படுத்துதல்' தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
இதை, தேசிய சுகாதார இயக்கம், தமிழக பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து நடத் தின. இதில், நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை தடுக்க, இரும்புச்சத்து மற்றும் அயோடின் செறிவூட்டப்பட்ட, 'டபுள் 45' உப்பு பயன்பாட்டை பொதுமக்களிடையே அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் பேசியதாவது:
உணவு உற்பத்தியில் பாதுகாப்பான நிலையை இந்தியா எட்டியுள்ளது. அதேநேரம், ஊட்டச்சத்து விஷயத்தில் பாதுகாப்பை அடைந்திருக்கிறோமா என்றால், அது கேள்விக்குறியே. நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டால், தெற்கு ஆசியாவில் வசிப்போருக்கு, ரத்தசோகை பாதிப்பு தொடர் பிரச்னையாக உள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும், உணவு பழக்கம் மாறி வருவதால், நுண்ணுாட்டச் சத்துகளை நாம் இழந்து வருகிறோம். அதை, மீண்டும் உடலில் சேர்ப்பது அவசியம். அதற்காக, அரிசி, கோதுமை, பால், எண்ணெய் போன்றவற்றில், உணவு வலுவூட்டலுக்கான ஊட்டச்சத்துகள் சேர்க்கப்படுகின்றன.
இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பை, மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் கே.சி.சேரன் பேசியதாவது:
தமிழகத்தில், ஆண்டுக்கு 9 லட்சம் பெண்கள் கர்ப்பமடைகின்றனர். அவர் களில், 1.20 லட்சம் பேருக்கு, லேசான ரத்தசோகை; 1.39 லட்சம் பேருக்கு மிதமான ரத்தசோகை உள்ளது. 1,766 பேர் கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
முன்னர், தைராய்டு பிரச்னையை தீர்க்க அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்பட்டது. அது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை குறைக்க, இரும்புச்சத்து மிகுந்த உணவு பொருட்களை, ரேஷன் கடைகள் வாயிலாக தமிழகம் முழுதும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிர்மல்சன் பேசுகையில், “தனியார் நிறுவன மாத்திரைகளை விட, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் சிறந்தவை.
“அவற்றில், 16 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது; ரத்த சோகை பாதிப்பை தடுக்கும். கர்ப்பிணியருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்திற்கும், அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கும், 'டபுள் 45' உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது,” என்றார்.
மஞ்சள் நிற அரிசியை தவிர்க்காதீர்!
சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து அரிசி வழங்கப்படுகிறது. அந்த அரிசியில், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, போலிக் அமிலம் போன்ற சத்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அது, மஞ்சள் நிறத்தில் இருக்கும்; வேக வைக்கும் போது, அதிலுள்ள சத்து சாதம் முழுதும் பரவும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியிலும் இது சேர்க்கப்படுகிறது. அடர்த்தி குறைவாக இருப்பதால், தண்ணீரில் மிதக்கும். இது, மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மக்கள் துாக்கி எறிந்து விடுகின்றனர். உடலுக்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துகளுக்காக, அந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது. எனவே, அந்த மஞ்சள் நிற அரிசியை துாக்கி எறிவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
முன்காலத்தில், இரும்பு பாத்திரத்தில் உணவு சமைத்த போது, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படவில்லை. எனவே, இரும்பு பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் முறைக்கு மக்கள் மாற வேண்டும். சில இடங்களில் , துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை சமையலில் போட்டு வேகவைத்து சாப்பிடும் முறை இன்றும் உள்ளது.
- மலர்விழி இணை இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம்