கனிமொழி குறித்து அவதுாறு பரப்பியவர் கஞ்சாவுடன் கைது
கனிமொழி குறித்து அவதுாறு பரப்பியவர் கஞ்சாவுடன் கைது
ADDED : செப் 19, 2025 02:51 AM
துாத்துக்குடி:கனிமொழி எம்.பி., மற்றும் திருச்செந்துார் கோவில் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியவர் கஞ்சாவுடன் சிக்கினார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், வண்ணார்தெருவை சேர்ந்த மணிகண்டன், 36, திருச்செந்துார் கோவில் நிர்வாகம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதுாறு தகவல்களை பதிவிட்டு வந்தார். கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இதேபோல, ஒரு சமுதாய பெண்கள் குறித்தும், நகராட்சி தலைவி குறித்தும் மணிகண்டன் அவதுாறான கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டும் எழுந்தது. சமீபத்தில் கனிமொழி எம்.பி., குறித்து ஆபாசமான கருத்துகளை மணிகண்டன் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக, அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில், துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் மணிகண்டனை பிடித்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை பேரூரணி சிறையில் அடைத்தனர்.