பெண்ணை பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பெண்ணை பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : நவ 01, 2025 03:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா, நாரண மங்கலத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மணிவண்ணன், 22; இவரும், அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், பிளஸ் 2 வரை படித்த நிலையில், சென்னை பாடியில் உள்ள ஒரு துணிக்கடையில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.
அங்கு ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய மணிவண்ணன், கடந்த 2020ம் ஆண்டு, அக்.5 ம் தேதி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மணிவண்ணன் மீது, செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றவாளியான மணிவண்ணனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, மணிவண்ணன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

