அ.தி.மு.க.,விலிருந்து இன்னும் பலர் தி.மு.க.,வுக்கு வருவர்: மருது அழகுராஜ்
அ.தி.மு.க.,விலிருந்து இன்னும் பலர் தி.மு.க.,வுக்கு வருவர்: மருது அழகுராஜ்
ADDED : செப் 20, 2025 04:57 AM

சென்னை: அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், நேற்று முன்தினம் தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க.,விலிருந்த மருது அழகுராஜ். இரட்டை தலைமை பிரச்னையில், பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக இருந்ததால், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வுக்கு, எனது தமிழ் பேச்சு, எழுத்தை ஒப்படைத்து உழைத்தேன். பழனிசாமியின் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு அரசியலை கண்டித்ததால், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டேன்.
ஆனாலும், அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக முயற்சித்தேன். அ.தி.மு.க.,வை பழனிசாமி அபகரித்தார். இப்போது பழனிசாமியை பா.ஜ., அபகரித்து விட்டது. எனவே, என் உழைப்பையும், ஆயுளையும் வீணாக்க விரும்பாமல், தி.மு.க.,வில் இணைந்து விட்டேன்.
இறைவன் தருகிற எஞ்சிய ஆயுளை, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து உழைக்க, உறுதி பூண்டுள்ளேன். தி.மு.க., என்பது அ.தி.மு.க.,வின் எதிர் முகாம் அல்ல. தி.மு.க.,விலிருந்து அ.தி.மு.க., உருவானபோது, இரு கட்சிகளையும் ஒருங்கிணைக்க, அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரக்காயர் துவங்கி, ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் வரை பலர் முயற்சித்தனர். ஆனால், அது முடியாமல் போனது.
இப்போது பழனிசாமி புண்ணியத்தில், இரு கட்சிகளும் ஒன்றிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து இன்னும் பலர் தி.மு.க.,வுக்கு வருவர். இவ்வாறு அவர் கூறினார்.