தற்காப்புக்கலை பயிற்சி திட்டம் ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' நிதி 'கட்' பள்ளி மாணவியர் அதிருப்தி
தற்காப்புக்கலை பயிற்சி திட்டம் ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' நிதி 'கட்' பள்ளி மாணவியர் அதிருப்தி
ADDED : ஆக 05, 2025 11:26 PM
மதுரை:அரசு பள்ளிகளில் மாணவியருக்கு, தற்காப்புக்கலை பயிற்சியின் போது அவர்கள் சோர்வடையாமல் இருக்க ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' வழங்க ஒதுக்கப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவியர் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு சூழலை யும் தைரியமாகவும், நிதானமாகவும் எதிர்கொள்ள தேவையான ஆற்றல், திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் சில ஆண்டுகளாக தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு மாணவியருக்கும், 5,804 அரசு உயர், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கும் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கல்வியாண்டில் மூன்று மாதங்கள் அளிக்கப்படும் பயிற்சியின்போது மாணவியர் சோர்வின்றி தொடர பாசிப்பயறு, சுண்டல், வாழைப்பழம் என ஊட்டச்சத்தான 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படுகிறது. இதற்காக 4,000 ரூபாயில் மாதம் 1,000 ரூபாய் 'ஸ்நாக்ஸ்'க்கு ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்தாண்டு, இத்திட்டம் குறித்து மாநில திட்ட இயக்குநர் - எஸ்.பி.டி., செயல்முறைகளில் ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' குறித்த விபரம் இடம் பெறவில்லை. இது மாணவியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.