கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
ADDED : பிப் 18, 2025 09:03 PM

சென்னை; கோவையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை;
கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் இருவேறு கல்லூரிகளில் பயிலும் 7 மாணவர்கள் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மட்டும் போதுமானதல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளை தீர விசாரித்திடவும், இது போன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? வேறு நபர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதை தடுப்பதற்கு காவல் துறை உரிய விழிப்புணர்வையும், இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யும் போது பத்திரிகைகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் வேண்டும். அதற்கு மாறாக, காவல்துறையினர் பிரச்னைகளை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளும் போக்கு என்பது இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும்.
தமிழகத்தில் பள்ளிச்சிறுமிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களிலும், பொதுப் போக்குவரத்துக்களிலும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இக்கொடுமைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு கறாரான நடவடிக்கைகளை முடுக்கி விடவேண்டுமெனவும், தேவையெனில் காவல்துறையின் செயல்பாட்டை முறைப்படுத்திட வேண்டும்.
இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு போதைப்பொருள் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை ஒழித்திடவும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில் மாநில குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவர் நியமனம் செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிடவும், அவருக்கு உரிய கவுன்சிலிங் சிகிச்சை அளித்து தொடர்ந்து அச்சிறுமி விரும்பும் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
இவ்வாறு பெ. சண்முகம் கூறி உள்ளார்.

