'என்கவுன்டர்' கொலைகளுக்கு எதிர்ப்பு நீதி விசாரணை கேட்கிறது மார்க்சிஸ்ட்
'என்கவுன்டர்' கொலைகளுக்கு எதிர்ப்பு நீதி விசாரணை கேட்கிறது மார்க்சிஸ்ட்
ADDED : செப் 24, 2024 10:07 PM
சென்னை:'என்கவுன்டர்' என்ற பெயரில் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் போலீஸ் துறைக்கு இல்லை என்றும், இதுவரை நடந்த என்கவுன்டர்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், என்கவுன்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும், கடந்த 2 மாதங்களில், 3 பேர் என்கவுன்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும் மரண தண்டனைகளையே ஒழிக்க வேண்டும் என, உலகம் முழுதும் கருத்துக்கள் மேலெழுந்துள்ளன,
இந்நிலையில், குற்றவாளிகள் என கருதப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை, போலீஸ் துறையினர் எடுத்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. என்கவுன்டர்களில் கொல்லப்பட்டவர்கள் கடுமையான குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என கூறி, விசாரணையின்றி கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது.
எத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும், அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொண்டு நீதிமன்றங்கள் வாயிலாக, தண்டனை பெற்றுத் தர வேண்டும். போலீஸ் துறை சட்டத்தை கையில் எடுப்பது சரியல்ல. என்கவுன்டர்கள் குற்றங்களை குறைத்து விடும் என்றால், இந்நேரம் கொலைகள் குறைந்திருக்க வேண்டும்.
போலீஸ் துறையினர் தங்கு தடையற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்வதும், அவர்களே மரண தண்டனையை நிறைவேற்றுவதையும் சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்கவே முடியாது. என்கவுன்டர் நடவடிக்கைகள் அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கும். எனவே, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.