மாதா அமிர்தானந்தமயி 72- வது பிறந்தநாள் விழா; மத்திய அமைச்சர் நட்டா பங்கேற்பு
மாதா அமிர்தானந்தமயி 72- வது பிறந்தநாள் விழா; மத்திய அமைச்சர் நட்டா பங்கேற்பு
ADDED : செப் 30, 2025 07:54 AM

- நமது நிருபர் -
மாதா அமிர்தானந்தமயி 72-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கேரள மாநிலம், அமிர்தபுரியில் நடந்த விழாவில், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தபுரியின் சத்சங்கமும், இசை இயக்குனர் சரத் மற்றும் பின்னணிப் பாடகி மஞ்சரி தலைமையிலான, மனம் கவரும் பக்தி நிறைந்த இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மாதா அமிர்தானந்தமயி விழா மேடைக்கு வந்தார். அவரை கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வரவேற்றார். மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., தேசியத் தலைவருமான நட்டா, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாதா அமிர்தானந்தமயி முழு வாழ்க்கையும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவரது மனிதாபிமான முயற்சிகள் உலகின் அனைத்து பகு திகளிலும் சென்றடைந்துள்ளன. அமிர்தா மருத்துவமனைகளின் சுகாதார சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை, மேலும் அமிர்தா, கல்வித் துறையிலு ம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பெண்கள் முன்னேற்ற முயற்சிகளின் மூலம், சமூகத்தில் எண்ணற்ற பெண்கள் உயர்ந்துள்ளனர். சுனாமி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களின் போதெல்லாம், மாதா அமிர்தானந்தமயி கருணையானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் அவரது பிறந்தநாள் விழா தனித்துவமான சிறப்பை அடைகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், புகழ்பெற்ற அறிஞர் நாதனுக்கு 'அமிர்த கீர்த்தி' விருதை மத்திய அமைச்சர் நட்டா, மாதா அமிர்தானந்தமயி வழங்கி கவுரவித்தனர். கலைஞர் நம்பூதிரி வடிவமைத்த இந்த விருது, பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1,23,456 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.
ஐக்கிய நாடுகள் சபையில் மாதா அமிர்தானந்தமயி வரலாற்று சிறப்புமிக்க மலையாள உரையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 72 பிரபலங்களின் சிந்தனைகளின் தொகுப்பான “அம்மா கடல்” வெளியீட்டுடன், “ஒரு உலகம், ஒரு இதயம்” என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான மலையாளக் கட்டுரை, கலை மற்றும் பிற போட்டிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன் மற்றும் முருகன், ஹரியானா அமைச்சர் ராஜேஷ் நகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசி தரூர் மற்றும் வேணுகோபால் (ஏஐசிசி பொதுச் செயலாளர்), நீதிபதிகள் ஜெயக்குமார், நாகரேஷ் மற்றும் மகாமண்டலேஷ்வர் சந்தோஷானந்த மகராஜ், ஸ்வாமி சத்ஸ்வரூபானந்த சரஸ்வதி, ஸ்வாமி குருரத்னம் ஞானதபஸ்வி, ஸ்வாமி கீதானந்தன், ஸ்வாமி விசாலானந்த கிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், முரளீதரன், கும்மனம் ராஜசேகரன், வெள்ளாபள்ளி நடேசன், துஷார் வெள்ளாபள்ளிபி மற்றும் மேலும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.