கணிதமேதை கையெழுத்து பிரதிகள் தமிழ் மின் நுாலகத்தில் பதிவேற்றம்
கணிதமேதை கையெழுத்து பிரதிகள் தமிழ் மின் நுாலகத்தில் பதிவேற்றம்
ADDED : செப் 26, 2025 01:45 AM
சென்னை:'சென்னை பல்கலையில் நீண்ட காலமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் கையெழுத்து பிரதிகள், மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன' என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ் இணைய கல்வி கழகத்தின் கீழ், https://tamildigitallibrary.in இணையதள முகவரியில், தமிழ் மின் நுாலகம் செயல்படுகிறது. இதில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நுால்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை, மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்ப ரீதியாக, தமிழ் மின் நுாலகம், தற்போது மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், புதிதாக ஒளிப்படங்கள், ஒலித்தொகுப்புகள், வீடியோ, நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அரிய நுால்கள், ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, எழுத்தாளர் விபரம் உள்ளிட்ட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சென்னை பல்கலையில், நீண்டகாலமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கணித மேதை சீனிவாச ராமானுஜரின் கையெழுத்து பிரதிகள், மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த கையெழுத்து பிரதிகள், மூன்று தொகுதிகளாக 700 பக்கங்களில் இருந்தன. தற்போது, இது மின் நுாலகத்தில் ஒரு தனி தொகுப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.