தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உளவியலாளர் பணியிடங்கள் காலி
தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உளவியலாளர் பணியிடங்கள் காலி
ADDED : அக் 19, 2025 04:07 AM

மதுரை: சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வான மருத்துவ உளவியலாளர்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணிக்கு சேர்ந்ததால் தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் மூலம் ஆண்டுக்கு 3000 பேர் எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி தேர்ச்சி பெறுகின்றனர்.
இவர்கள் மருத்துவ உளவியலாளர்கள் (உதவி பேராசிரியர்) என்ற பெயரில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உளவியல் பரிசோதனை, மனநல ஆலோசனை, கவுன்சிலிங், சைக்கோ தெரபி போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளுக்கான இடையீட்டு சிகிச்சையை (டி.இ.ஐ.சி.) மதிப்பீடு செய்வதும் இவர்களின் பணி.
மேலும் மருத்துவ மாணவர்களுக்கு சைக்காலஜி பாடம் நடத்துவது, ஆராய்ச்சியில் பங்கேற்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மருத்துவ உளவியலாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
கடந்த ஆட்சியில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட்டன. ஆனால் 2018ம் ஆண்டுக்கான 32 காலிப்பணியிடத்தை மட்டும் கணக்கிட்டு சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லுாரிகளுக்கான பணியிடங்களை கணக்கில் எடுக்கவில்லை. 32 பணியிடத்திற்கு 22 பேர் தேர்வான நிலையில் அனைவருமே சென்னை, சுற்றியுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளை தேர்வு செய்து பணியில் சேர்ந்தனர்.
தேவை அதிகம் இதனால் சென்னையைச் சுற்றி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளில் கூட இப்பணியிடம் நிரம்பி விட்டது. பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் தென்மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளை யாரும் தேர்வு செய்யவில்லை.
தமிழகத்தில் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப மருத்துவ உளவியலாளர்கள் எண்ணிக்கை இல்லை. ஆயிரம் பேர் தேவைப்படும் இடத்தில் 300 பேர் தான் உள்ளனர்.
அதிலும் 31 பேர் அரசு சேவையில் உள்ளனர். மீதியுள்ளோர் தனியார் கல்லுாரி, வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலை பார்க்கின்றனர். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப டி.என்.பி.எஸ்.சி., மூலம் அல்லது மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் கூடுதல் ஆட்களை தேர்வு செய்யவேண்டும்.